தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேனி – அல்லிநகரம் நகராட்சி தேர்தலில் மொத்தம் 33 வார்டுகளில் திமுக 19 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 7 வார்டுகளிலும் அமமுக 2 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளிலும் சுயேட்சை 2 வார்டுகளிலும் பாஜக 1 வார்டிலும் வெற்றி பெற்றன.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மாநில அளவில் தொகுதிப் பங்கீட்டின்படி, திமுக கூட்டணியில் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக தலைமையின் உத்தரவையும் மீறி திமுகவைச் சேர்ந்த ரேணுபிரியா நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இதற்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தும் பலனில்லை. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களை பதவி விலகச் சொன்னார். ஆனாலும், இன்னும் அவர் பதவி விலகவில்லை. திமுக தலைமையும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அண்மையில், தேனி – அல்லிநகரம் நகராட்சியில் முதல் கூட்டம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த நகர்மன்ற கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 10 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சி 29வது வார்டு திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரியுடன் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், பெண் கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி, ஏற்கெனவே எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்த வந்து சேர வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும். அதுவரை கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என அனைத்து கவுன்சிலர்களும் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார். மேலும், தேர்தலுக்கு முன்பே வார்டுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாகக் கூறியதை கொடுக்கவில்லை என்று கூறுகிறார்.
மேலும், கமிஷன் பர்சன்டேஜ் பிரிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். 32வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வம் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுப்பதாக கூறிவிட்டார் என்கிறார். இதற்கு தலைவர் ரேணுப்பிரியா, மொத்த பணமும் தேர்தலுக்கு முன்னரே மாவட்ட செயலாளரிடம் கொடுக்கப்பட்டு விட்டது. துணைத் தலைவர் முடிவு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தர வேண்டிய பணத்தை தருகிறோம் எனச் சொல்லியிருந்தோம். பழைய டெண்டர்களுக்கு கமிஷன் கொடுக்க முடியாது. தேர்தலின் போது எல்லோருக்கும் சேர்த்து கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறோம். ஆனால் எங்களின் பதவியே உறுதியில்லாமல் இருக்கிறது என்று கூறுகிறார்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் தங்களுக்கு சேர வேண்டிய பணம் கிடைக்காதது குறித்து போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், தலைவர் ரேணுபிரியா நாளைக்கு மற்றொரு பெண் கவுன்சிலரான சந்திரகலா ஈஸ்வரியிடம் கவுன்சில் கூட்டத்திற்கு வருமாறு அழைக்கிறார். அதற்கு, அந்த பெண் தங்களுக்கு கொடுப்பதாகத் தெரிவித்த 11 லட்சம் ரூபாய் இன்னும் வராததால் அவர்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று எல்லோரும் கூறுகிறார்கள். அதற்கு அவர், அனைத்து பணமும் கட்சி நிர்வாகியிடம் கொடுக்கப்பட்டதாகவும், கவுன்சிலர்கள் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதற்கு ரேணுபிரியா, கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரியிடம் திட்டங்களுடன் வாருங்கள் அந்த இடத்திலேயே ஒப்பந்த தரப்படும் என்று கூறுகிறார்.
ஆனால், அதிமுக ஆட்சியின் போது, இதுபோல பணம் வழங்கப்பட்டது என்று தங்களிடம் கூறப்பட்டதாக பெண் கவுன்சிலர் மீண்டும் கூறுகிறார்.
இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஆடியோ உரையாடல் உண்மை என கண்டறியப்பட்டால் கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். மறுபுறம், முறையான அனுமதியின்றி உரையாடலை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது சட்டவிரோதமானது என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“