2021-22-ம் நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடி – ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்! மத்தியஅரசு

டெல்லி: 2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும்,  உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக முடங்கிய இந்திய பொருளாதாரம் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியதுடன், அனைத்து தொழில்களும் பழைய நிலைக்கு திரும்பியதால், பொருளாதார வளர்ச்சி எற்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய வர்த்தக மந்திரி பியூஸ்கோயல் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியா மைல்கல் சாதனை படைத்திருப்பதாக தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிகையாக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை போட்டதால், இந்தியாவில், சுற்றுலா, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தபோதும், சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியா  சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் நிறை வடைந்த 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் சேவை ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவாக 250 பில்லியன் டாலராக (சுமார் ரூ.18.75 லட்சம் கோடி) அதிகரித்து இருப்பது சாதனையாகும் என்று கூறினார்.

இதுமட்டுமின்றி, சரக்கு ஏற்றுமதியும் கடந்த நிதி ஆண்டில் 400 பில்லியன் டாலராக (சுமார் ரூ.30 லட்சம் கோடி) அதிகரித்து இருப்பதாக கூறிய பியூஸ் கோயல், இந்தியாவில் ஐ.பி.எல் ஜூரம் வாட்டி வதைப்பதை போல, சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழும் புதிய உச்சங்களை எட்டுவதாக கூறியதுடன் இதற்காக,  நிர்வாக ஆலோசகர்கள், கணக்காளர்கள், நிறுவன செயலாளர்கள், என்ஜினீயர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற அனைத்து தொழில் வல்லுனர்களுக்கும்  தெரிவிப்ப தாகவும் கூறினார்.

ஜவுளித்துறை குறித்து கூறிய மத்திய ஜவுளித்துறை செயலாளர் யு.பி.சிங், மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஜவுளித்துறையில் முதலீடு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து 67 பரிந்துரை கடிதங்கள் மத்திய அரசுக்கு வந்தன. இதில் கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிலார்க் இந்தியா லிட்., அர்விந்த் லிட். உள்ளிட்ட கம்பெனிகளின் 61 பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு அங்கீகரித்த இந்த 61 பரிந்துரை களில், விண்ணப்பதாரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உத்தேச மொத்த முதலீடு ரூ.19,077 கோடி என்றும்,  இதன் மூலம் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.184,917 கோடி விற்றுமுதல் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.