48 பெண் நோயாளிகளிடம் அத்துமீறிய 72 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர்

ஸ்காட்லாந்தில் இந்திய வம்சாவளியான 72 வயது கிருஷ்ணா சிங் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மருத்துவமனைக்கு வரும் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் வரும் பெண் நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் முத்தம் கொடுப்பது, அவர்களது உடலில் தேவையில்லாத இடங்களில் தொடுவது போன்ற செய்கைகளை செய்து வந்துளார். இந்த சம்பவம் குறித்து அவருடைய 48 பெண் நோயாளிகள் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் கிளாஸ்கோவ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அங்கு அவர் தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தன்னுடைய நோயாளிகள் பொய் சொல்வதாகவும், அவர் செய்த மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் பயிற்சி செய்தவை எனவும் கூறியுள்ளார்.
பிப்ரவரி 1983 முதல் மே 2018 வரை அவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றியபோது இத்தகைய செயல்களை அவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ஏஞ்சலா கிரே கூறியதவாது:- 
மருத்துவர் சிங் தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார். சில நேரங்களில் நுண்ணியதாகவும், சில நேரங்களில் வெளிப்படையாகவும் செய்துள்ளார். தன் பணி வாழ்க்கை முழுவதும் இதே போன்ற வேலையை தான் செய்துள்ளார்.
கிருஷ்ணா சிங் மருத்துவ துறையில் மதிக்கப்படும் நபராக இருந்துள்ளார். அவருடைய மருத்துவ சேவைகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து உயரிய  விருதுகளை பெற்றுள்ளார். 2018ம் ஆண்டு ஒரு பெண்மணி கொடுத்த புகாருக்கு பின் நடைபெற்ற விசாரணையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 54 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏஞ்சலா கிரே கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த மாதத்திற்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.