நாளை கள்ளழகா் எதிர்சேவை: பக்தர்கள் வைகையில் இறக்க தடை!

மதுரை: நாளை கள்ளழகா் எதிர்சேவை நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் வைகையில் இறக்க தடை விதிக்கப்படுவதாக மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வைகையில் தண்ணீர் அதிகம் வருவதால், பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நாளை (ஏப்.16) நடைபெற உள்ளது. வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத் துக்காக, அழகா்கோவிலில் இருந்து கள்ளழகா் தங்கப்பல்லக்கில் நேற்று (வியாழக்கிழமை)  மாலை 6 மணியளவில் புறப்பட்டு, கொண்டப்பநாயக்கா் மண்டபத்தில் எழுந்தருளினார். பல்லக்கு கயிறு சரிர்க்கும் நிகழ்வுகளுக்குப் பின்னா், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் உத்தரவுபெற்று அதிர்வெடிகள் முழங்க தங்கப் பல்லக்கில் மதுரைக்கு 6.30 மணியளவில் புறப்பட்டார்.  வழிநெடுகிழும் பக்தா்களின் வரவேற்பைப் பெறும் அழகா், மண்டகப்படிகளில் எழுந்தருளி வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரையை வந்தடைந்தார்.

இதையடுத்து நாளை கள்ளழகா் எதிர்சேவை நடைபெற உள்ளது. அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

இதை முன்னிட்டு மதுரை தல்லாகுளம், அவுட்போஸ்ட் பகுதியில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அழகா் வைகையாற்றில் எழுந்தருளல் மற்றும் அழகா் பூப்பல்லக்கு ஆகிய வைபவத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வைகை ஆற்றில்,  தண்ணீர் வருவதால் பக்தர்கள் யாரும் வைகையாற்றில் நாளை இறங்க அனுமதியில்லை. ஆற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்யும்படியும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.