'மோடியை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்' – என்ன சொன்னார் இளையராஜா?

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்” என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்காக மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய எத்தனிக்கிறது.

image

பிரதமர் மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியை பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி இருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து, சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார். வீடுகள், கழிப்பிடங்களை ஏழை மக்களுக்காக மோடியின் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.

முத்தலாக் சட்டம்

முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாக முஸ்லிம் பெண்களின் வாழ்வில் பெரிய அளவிலான மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். அதேபோல, ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.

image

எல்லாவற்றுக்கும் மேலாக, மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கின்றன. இருவருமே ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் மகத்தான அஞ்சலி. விடுதலை போராட்ட வீரர்கள் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. நமது மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது. இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன். இவ்வாறு அந்த முன்னுரையில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.