எதிர்க்கட்சியினர் கோரிக்கை; உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்: விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் எதிர்க்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைத்து, அறிவுரை வழங்கிய முதல்வரை தேமுதிக வரவேற்கிறது என அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு, பெண் கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென சமீபத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கியதை தேமுதிக வரவேற்கிறது.

அதேபோல் தேமுதிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவிக்கும் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க, இதுவே சரியான தருணம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டம் முடிந்த மறுநாளே, கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுப்பதே தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவையில் அறிவித்ததை தேமுதிக மனமுவந்து வரவேற்கிறது.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, எனது ஆணைக்கிணங்க, விருதுநகரில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் எதிரொலியாக குற்றவாளிகளில் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது.” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.