சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மலை கோயிலில் ரோப் கார் சோதனை ஓட்டம்! அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலையில் அமைந்துள்ள  ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல ரோப் கார் வசதி செய்யப் பட்டு வந்த நிலையில், அதன்  சோதனை ஓட்டம் நடைபெற்றது. அமைச்சர் காந்தி ரோப்காரில் அமர்ந்து சென்று சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில். பழமை வாய்ந்த இந்த கோவில் 750 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பக்தர்கள் சுமார் 1300 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இதனால், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மலையே நரசிம்ம  பெருமானை தரிசிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அதனால், பழனி மலை முருகனை தரிசிக்க அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் போல, சோளிங்கரிலும் அமைக்க வேண்டும் என அரசுக்கு பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர் கருணாநிதி, அதற்கான ஏற்பாடுகளை அறிவித்தார். பின்னர் அதிமுக ஆட்சியின்போது கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் பக்தர்கள் கோரிக்கை வைக்க கடந்த  2017-ம் ஆண்டு அதிமுக அரசுக்கு அதற்காக ரூ.9 கோடி மதிப்பில் ரோப்கார் வசதிக்கான ஒப்பந்தம் போடப்பட்டு பணி நடைபெற்று வந்து. இந்த பணிகள்  கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து தமிழ்ப்புத்தாண்டானா நேற்று (ஏப்ரல் 14ந்தேதி)  சோதனை ஓட்டம்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சோதனை ஓட்டத்தை  கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் அதில் பயணம் செய்து மலைமேல் உள்ள ஸ்ரீ லட்சுமி நரிசம்மரை தரிசனம் செய்தார்.

இதுகுறித்து கூறிய மாவட்ட ஆட்சியர், ரோப்கார்  சோதனை ஓட்டமானது 2 வாரங்களுக்கு நடைபெறும். தினசரி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை மணல் மூட்டைகளை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும், பின்னர் இதுகுறித்து ஆய்வு நடத்தி,  அதற்கான அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்த பிறகு இறுதி சான்றிதழ் வழங்கப்பட்டு கம்பிவட ஊர்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.

சோளிங்கரில் மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 4 பெட்டிகள் மேலே செல்லும் வகையிலும், 4 பெட்டிகள் மேலிருந்து கீழே இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு பெட்டியல் 4 பேர் வீதம் 16+16 என 32 பேர் பயணிக்க முடியும்.  ஒரு மணி நேரத்துக்கு 400 பக்தர்களை ஏற்றி சென்று இறக்க முடியும்.

இந்த நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம், கோயில் உதவி ஆணையர் ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.