பாட்னா: “நான் ராமரை நம்பவில்லை. அவர் கடவுள் இல்லை; துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் கருத்துக்களைப் பரப்ப உருவாக்கிய கதாபாத்திரம் தான் ராமர்” என பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (HAM) கட்சியின் தலைவரும், பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி நேற்று வியாழக்கிழமை அம்பேர்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “நான் ராமரை நம்பவில்லை. அவர் கடவுள் இல்லை. துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் கருத்துக்களைப் பரப்ப உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே ராமர். அவர்கள் ராமாயணத்தை எழுதினார்கள். அதில் பல நல்ல பாடங்கள் உள்ளன. நாங்கள் துளசிதாசர் மற்றும் வால்மீகியை நம்புகிறோம்.
நீங்கள் ராமரை நம்பினால், சபரி கடித்துக் கொடுத்த பழத்தை ராமர் சாப்பிட்டதாக நாங்கள் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் கடித்துக் கொடுத்தப் பழத்தை நீங்கள் சாப்பிட வேண்டாம். எங்கள் கைப்பட்ட பழத்தையாவது சாப்பிடுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, “இந்தியாவில் நிலவி வரும் சாதிய பாகுபாட்டை சுட்டிக்காட்டிய அவர், இங்கு, ஏழை – பணக்காரன் என இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன” என்றார்
பிஹாரில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரான ஜிதன் ராம் மாஞ்சி, ராமர் பற்றித் தெரிவித்திருக்கும் இந்த கருத்து ஆளும் கூட்டணியில் பலரை திகைப்படையச் செய்துள்ளது.
நிதிஷ் குமார் – பாஜக அமைச்சரவையில் ஜிதன் ராம் மாஞ்சியின் மகன், சந்தோஷ் மாஞ்சி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.