நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடியில் சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பதினெண் சித்தர்களுள் ஒருவரான வால்மீகி சித்தர் ஜீவ சமாதி அடைந்த தலமாக இது உள்ளது. இந்தக் கோயிலிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வடம்பிடித்துத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள சித்ரா பவுர்ணமி விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பால் காவடி ,பன்னீர் காவடி,வேப்பிலை காவடி, ரதகாவடி உள்ளிட்ட காவடிகளைச் சுமந்து வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, ஆய்வாளர் கமலச்செல்வி ,செயல் அலுவலர் மணவழகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.