சீன படையை சமாளிக்க சீன மொழியை கற்கும் இந்திய ராணுவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை சமாளிக்க, நமது ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, சீன மொழியை கற்று கொடுக்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக, ராணுவ தளபதி நரவானேயிடம் அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் மூலமும், பல்கலை மற்றும் பயிற்சி நிலையங்கள் மூலம் வீரர்களுக்கு சீன மொழியின் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் தாக்குதல் தொடர்பாக ஆய்வு நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன், இந்திய ராணுவம் பயன்படுத்தும் ரஷ்யா ஆயுதங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளின் தாக்கம் குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில், சீனாவின் பலதுறை நிபுணத்துவம் மற்றும் மாண்டரினில் ராணுவ வீரர்கள் திணறுவதை சரி செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாண்டரின் மொழியை கற்று கொடுப்பது தொடர்பாக, ஷிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளி மேஜர் ஜெனரல் தலைமையில், வெளிநாட்டு மொழி பயிற்சி குறித்து வரைவு அறிக்கை தயாரித்துள்ளது.

அதிகாரிகள் மற்றும் இளநிலை பயிற்சி அதிகாரிகள் 20 பேர், காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலையில் மாண்டரின் மொழி குறித்து டிப்ளமோ மற்றும் பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் கடந்த ஆண்டு நவம்பரில் இணைந்துள்ளனர். கல்வி நிலையங்களிலும் சீன மொழியில் எம்ஏ பட்டத்தினை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பெறுவதற்கு வசதியாக இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீன மொழியை கற்றுத்தருவது தொடர்பாக பல்வேறு பல்கலைகழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

latest tamil news

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் மட்டும் அல்ல, வருங்காலத்தில் சீனாவும் நமக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். பல ஆண்டுகளாக பாகிஸ்தான் குறித்து கவலைப்பட்ட நிலையில், மேற்கு பகுதியில் உள்ள எதிரியை பற்றி தேவையான புலமை, மொழி, பழக்க வழக்கங்கள் போன்றவை ஒரே மாதிரியானது தான். ஆனால், அதில் சீனா வேறு மாதிரியாக உள்ளது.

மொழி, கலாசாரம், அரசியல் மற்றும் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் சீனா குறித்த நிபுணத்துவத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்தை கையாளும் ராணுவ அதிகாரிகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடிக்கின்றனர். பின்னர் வேறு பகுதிகளுக்கு மாற்றப்படுகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பணியாற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகள் நிபுணத்துவம் பெறும் வகையில், தொடர்ச்சியாக மற்றும் நீண்ட பணிக்காலம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.