அஸ்ஸாமில் உள்ள இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிக்கும் நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தின் துலியாஜன் தலைமையகம் (Duliajan Headquarters) மர்ம நபர்களால் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த பல கணினிகள் மற்றும் பல இணையதளங்கள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சைபர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் பாதிப்பைச் சரி செய்ய $7,500,000 (தோராயமாக ரூ.57 கோடி) பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம், “கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) எங்கள் கணினிகளில் செயலிழப்பைக் கண்டறிந்தோம். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் கணினிகளை தற்போது முடக்கிவைத்துள்ளோம். இது ஒரு வைரஸ், இது மிகவும் கடுமையான வலுவான வைரஸ். இது எங்கள் சில சேவைகளை பாதித்துள்ளது. இதை சரி செய்ய சிறிது நேரம் எடுக்கும். இதற்கு வெளியிலிருந்து நிபுணர்களின் உதவியையும் பெற்று வருகிறோம். இது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்திவரும் காவல்துறையினர், இது ஒரு வகையான ‘ransomware’ தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் சைபர் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கூறியுள்ளனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக நடந்த சைபர் தாக்குதல்களில் இது மிகப்பெரிய தாக்குதல் என்றும் கூறியுள்ளனர்.