இந்தியாவில் சட்ட உதவிகளின் தரம் குறித்த கவலையை ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “இங்கே பாகுபாடுகளால் ஆன சட்டங்கள்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை எப்போதும் ஏழைகளுக்குச் சமமற்ற முறையில் செயல்படுகின்றன. சமுதாயத்தில் ஒரங்கட்டபட்டவர்கள் நீதியை அணுகுவதற்குப் பல தடைகள் உள்ளன, கல்வியறிவு பெற்ற ஒருவருக்கும் சட்டங்களும் செயல்முறைகளும் மர்மமானவை.” என்கிறார்.
`கல்வி, வேலைவாய்ப்பில் பாகுபாடு ஒழிப்பு மற்றும் விளிம்புநிலை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், “இந்த அமைப்பு ஏழைகளுக்கு வித்தியாசமாகச் செயல்படுகிறது. நீதிமன்றங்கள், சிறார் நீதிமன்றங்கள், சிறார் நீதி வாரியங்கள் மற்றும் மகிளா நீதிமன்றங்கள் ஆகியவை சட்ட அமைப்புகளில் ஏழைகளுக்கான முதல் புள்ளியாகும். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் விசாரணையில் உள்ள 3.72 லட்சம் பேரில் 1.13 லட்சம் பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதேபோல் 37.1% பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். விசாரணையில் உள்ளவர்களில் 17 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் மற்றும் 19.5 சதவிகிதம் குற்றவாளிகள் இஸ்லாமியர்கள். சட்ட உதவி பெறுபவர்களான விளிம்புநிலை மக்களுக்கு உண்மையில் வேறு வழியில்லை. எந்தவொரு சேவையையும் இலவசமாகப் பெற்றாலோ அல்லது அதற்கு இணையாகக் கணிசமான மானியம் வழங்கப்பட்டாலோ தரமானதாகக் கோரமுடியாது என்று ஏழைகள் நம்புகிறார்கள். மனித உரிமை வழக்குகளில் வாதாடும் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களை மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் வழக்கறிஞர்கள் என்று முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிறப்பு, வம்சாவளி, சாதி, வர்க்கம் மூலம் தலைமுறை தலைமுறையாக நீதி மறுக்கப்படும் நபர்களை அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது… அத்தகைய வரலாற்று அநீதிகளைச் சரிசெய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை அரசு கொண்டு வர வேண்டும். இதில் எஸ்.சி, எஸ்.டி, சமூகம், கல்வியில் பின்தங்கிய வகுப்பினர், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர், மதம், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சட்டத்திற்கு முரண்படும் குழந்தைகள் உட்படப் பலர் அடங்குவர். பாலியல் தொழிலாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலரின் ஒவ்வொரு செயலும் குற்றமாக்கப்பட்டுள்ளது. இதனால், யாசகம் பெறுவது, தெருவில் வசிப்பது, பாலியல் தொழில் செய்வது எல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவே கருதப்படுகின்றன. இந்தியாவில் குறைந்தது 20 மாநிலங்களில் யாசகம் எடுப்பதற்கு எதிரான சட்டங்கள் இன்னும் உள்ளன என்பது கவலைக்குரிய விஷயம்.
டெல்லி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய இடங்களில் மட்டுமே இந்தச் சட்டங்கள் நீதித்துறை தீர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன. பழங்குடியினர் நீண்ட காலமாக காவல்துறையின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள்தொகையில் கணிசமான பகுதியினரை ஒதுக்கி வைக்கும் கட்டமைப்புகள் இன்னும் அகற்றப்படவில்லை. அதனால்தான் கையால் சுத்தம் செய்தல், சாக்கடை சுத்தம் செய்தல் அல்லது கட்டாய உழைப்பில் ஈடுபடுபவர்கள் இன்னும் நம்மிடையே இருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிப் பேசிய தலைமை நீதிபதி, “விளிம்புநிலை மக்கள் பெரும்பாலும் சட்ட அமைப்பை…. பொருத்தமற்றதாகவும், அதிகாரம் மற்றும் உயிர்வாழ்வதற்கான கருவியாகவும் பார்க்கிறார்கள். அது அவர்களை ஒடுக்குவதற்காகச் செயல்படுகிறதென்றும், அதில் ஈடுபடுவதை விட அதைத் தவிர்ப்பதற்கான வழிகளை அவர்கள் வகுக்க வேண்டும் என்றும் அவர்களின் அனுபவம் அவர்களுக்குச் சொல்கிறது. ஏழைகளின் எஞ்சியிருக்கும் பல செயல்பாடுகளை குற்றமற்ற தாக்குவது பற்றிய விவாதங்களை நாம் புதுப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.