தமிழக அரசு எந்த திட்டத்துக்கு நிதி கேட்டாலும் அள்ளி கொடுப்போம்! மத்திய அமைச்சர் எல்.முருகன்

விருதுநகர்: தமிழக அரசு எந்த திட்டத்துக்கு நிதி கேட்டாலும் அள்ளி கொடுக்க மத்தியஅரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

முன்னேற துடிக்கும் மாவட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மத்திய தகவல் ஒலி பரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்  தலைமையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம், கல்வி, விவசாயம், குடிநீர், மத்திய அரசு வழங்கும் கடன் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முருகன் கூறியதாவது, இந்தியாவில் 112 மாவட்டங்களை முன்னேற துடிக்கும் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதில் தமிழகத்தில்  விருதுநகர் உள்பட 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.  உள்ளன. இதில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று.  விருதுநகர் மாவட்டத்தை அறிவித்தபோது இருந்த நிலையை விட தற்போது விருதுநகர் மாவட்டம் வளர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 112 முன்னேற விழையும் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் 3வது மாவட்டமாக உள்ளது என்றார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் காட்டன் இறங்குமதிக்கு 11% வரியை பிரதமர் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரி குறைப்பின் மூலம் ஈரோடு, கோவை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் பயன்பெறும். மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவித்து இருப்பதுபோல் முன்னேற விழையும் மாவட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக பின்தங்கிய வட்டாரமும் கண்டறியப்பட உள்ளது. அதை கண்டறிந்து வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் தான் மத்திய அரசின் திட்டங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் தான் மத்திய அரசின் திட்டம் மூலம் அதிகம் பயன் பெற்ற மாநிலம் என்ற முக்கிய இடத்தை பெற்று இருக்கிறது. தமிழக அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தின் எந்த திட்டத்திற்கு நிதி கேட்டாலும் அதனை கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. மேலும் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் பாதிக்காமல் இருக்க மத்திய அரசு மாதம் ரூ.1500 நிவாரணம் வழங்கி வருகிறது.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என்றும்,  கல்வியை பொதுப்பட்டியலிலும் மாநில பட்டியலிலும் இல்லாமல் ரகசியமாக வைத்துள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன என்பது குறித்து அவர் தான் விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடக்கிறது. மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டு கொண்டு வருகிறது. மேலும் எல்லை தாண்டி கிடைக்கும் மீன் வளத்தை இந்திய எல்லைக்குள் அந்த வளத்தை கிடைக்க மத்திய அரசு திட்டத்தின் மூலம் மீன் குஞ்சுகளை விடும் புதிய திட்டத்தை தொடங்கி நம்முடைய பகுதியில் மீன் வளத்தை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மீனவ சங்கத்திடம் இருந்து மீன்பிடி தடை காலத்தை மாற்றியமைக்க கோரிக்கைகள் இருக்கிறது. இதுகுறித்து வல்லுர்களிடம் கருத்தை கேட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.