’மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா’ – குவியும் விமர்சனங்களும் பெருகும் விவாதமும்

புத்தக முன்னுரை ஒன்றில் ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று இசையமைப்பாளர் இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இளைராஜாவின் ’மோடி, அம்பேத்கர் ஒப்பீடு’ குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்துதான் சர்ச்சையை பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

“1970 களில் கஷ்டப்பட்டு வந்து முன்னேறிய இளையராஜாவுக்கே மோடி அரசால் இன்று ஏழை மக்கள் படும் கஷ்டம் தெரியவில்லை” என்று பாஸ் (எ) பாஸ்கரன் என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.

“மோடியை பார்த்து அம்பேதகர் பெருமைபடுவார் – இளையராஜா. அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர், அதை சல்லி சல்லியாக நாம் வாழும் காலத்தில் நொறுக்கிகொண்டிருப்பவர் மோடி” என்று ஷேக் முகமது அலி என்ற பயனர் குறிப்பிட்டுள்ளார்.

”உன் தோடி ராகம்
பிடித்த எங்களுக்கு,
உன் மோடி ராகம் பிடிக்கவில்லை…”

– இப்படி ஒரு விமர்சன வரிகளை சதீஷ்குமார் என்ற பயனர் பதிவு செய்துள்ளார்.

இளையராஜா மீதான விமர்சனம் ஒருபுறம் இருக்க, இளையராஜாவின் ரசிகர்களோ ‘அனைவருக்கும் தங்களுக்குப் பிடித்த தலைவர்களைப் பாராட்டுவதற்கு உரிமை உண்டு’ என்று மறுபுறம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தன் மீதான விமர்சனத்துக்கு இளையராஜா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.