ராமநவமி ஊர்வலத்தில் கல்வீசியவர்களின் வீடு, கடை புல்டோசர்கள் மூலம் இடிப்பு: மபி பாணியில் குஜராத் அதிரடி

அகமதாபாத்: குஜராத்திலும் ராமநவமி தினத்தன்று  கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடு, கடைகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுகிறது. கடந்த 10ம் தேதி வட மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில்  ஊர்வலத்தின்போது, மோதல், கல்வீச்சு,  தீவைப்பு  என  கலவரம் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம், கார்கோனில் நடந்த ராமநவமி ஊர்வலத்தின் போது இருபிரிவினர் இடையே மோதல் உண்டானது. கல்வீச்சில் பலர் காயமடைந்தனர்.  ஏராளமான வாகனங்கள் தீ வைத்து  கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்க முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து  கலவரத்துக்கு காரணமானவர்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் நகரில் நடந்த ராமநவமி ஊர்வலத்திலும் அப்பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் சிறுபான்மை பிரிவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தை போன்று இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள், கடைகளை இடிக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கலவரம் நடந்த கம்பாட்டின் சாகர்புராவில் புல்டோசர் மூலம் இடிக்கும் பணி துவங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ‘‘சாகர்புரா சாலையின் இருபுறமும் உள்ள புதர்களில் மறைந்திருந்துதான், கலவரக்காரர்கள் கல்வீசினர். இதனால், இந்த புதர்கள் அகற்றப்படுகின்றன. அதேபோல், இங்கு சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், வீடுகள், கடைகளும் இடிக்கப்படுகின்றன,’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.