உடுப்பி : கான்ட்ராக்டர் தற்கொலைக்கு முன் நடந்தது என்ன என்பது குறித்து உடன் இருந்த நண்பர்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.கான்ட்ராக்டர் சந்தோஷ் நண்பர்களான பிரசாந்த் ஷெட்டி, 35, சந்தோஷ் மேதப்பா, 33 ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரிடம் அவர்கள் கூறியுள்ளதாவது:இம்மாதம் 7ல் நாங்கள் மூவரும் தார்வாடில் இருந்து காரில் புறப்பட்டு அடுத்த நாள் 8ல் சிக்கமகளூரை அடைந்தோம்.
அங்கு நான்கு நாட்கள் ‘பான் ஆப் பெர்ரி’ என்ற ஹோம் ஸ்டேவில் தங்கி இருந்தோம்.அங்கிருந்து 11ல் புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு உடுப்பியை அடைந்தோம். அங்கு மாலை 5:00 மணிக்கு ‘சாம்பவி’ லாட்ஜில் அறை எடுத்தோம். சந்தோஷ் பாட்டீல் அறை எண் 207லிலும், நாங்கள் இருவரும் 209ல் தங்கினோம்.இரவு 7:00 மணிக்கு நாங்கள் மூவரும் மது அருந்த பாருக்கு சென்றோம். பாரில் இருந்து வரும்போதே சந்தோஷ் பழரசம் வாங்கி கொண்டார். நாங்கள் சாப்பிட சென்றோம். அவர் லாட்ஜுக்கு சென்றார். இரவு 9:45 மணிக்கு நாங்கள் இருவரும் படுத்து விட்டோம்.இரவு 11:00 மணிக்கு அவர் எங்களுக்கு ‘குட் நைட்’ கூறியதோடு, காலையில் எழுப்ப வேண்டாம் எனவும் கூறினார். அடுத்த காலையில் அவர் எழவில்லை. நாங்கள் எங்களது அறையிலேயே இருந்தோம்.
அவர் எழவில்லை என்பதால் நாங்கள் மட்டும் காலையில் சிற்றுண்டி சாப்பிட சென்றோம். 9:30 மணிக்கு எங்களது மற்றொரு நண்பர் சுனில் பவார் போன் செய்து, ‘சந்தோஷ் பாட்டீல் காணாமல் போனதாக ஊடங்களில் செய்திகள் வருகிறது’ என்றார்.அதுவரை நாங்கள் எங்கள் மொபைல் போனை பார்க்கவில்லை. அதில் அவர் அனுப்பிய தகவல் இருந்தது. இதை பார்த்த நாங்கள் உடனடியாக நாங்கள் சந்தோஷ் தங்கியிருந்த அறைக்கதவை தட்டினோம். போன் செய்தோம். எடுக்கவில்லை.எனவே லாட்ஜ் வரவேற்பாளரிடம் சந்தோஷ் சாவியை கொடுத்து விட்டு வெளியில் எங்காவது சென்றாரா என கேட்டோம். இல்லை என்றார்.இதனால் பயந்து போன நாங்கள் லாட்ஜ் ஊழியரிடம் 11:00 மணிக்கு மாற்று சாவியை வாங்கி திறந்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement