கலிபோர்னியா: சமூக வலைதளங்களில் ட்விட்டருக்கு தனிச் சிறப்பு உண்டு. உலக அளவில்அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கலைத்துறையினர் முதல் பொதுமக்கள் வரை தங்கள் கருத்துகளை வெளிப்படையாக பகிர்வதற்கான தளமாக ட்விட்டர் உள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரில் புழங்குபவர். இந்நிலையில், ‘ஒரு சமூகம் ஜனநாயகப் பூர்வமாக செயல்படுவதற்கு பேச்சுச் சுதந்திரம் அவசியம். ட்விட்டர் அதன் தற்போதைய கட்டமைப்பில் முழுமையான பேச்சு சுதந்திரத்தைக் கொடுக்கும் தளமாக இல்லை. அது இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்’ என்று கூறிய எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை. மாறாக, பொதுமக்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதற்கு நம்பிக்கையான ஒரு சமூக வலைதளத்தை கட்டமைக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்ற வாரம் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதப் பங்குகளை எலான் மஸ்க் வாங்கினார். எனினும், தான் ட்விட்டரின் இயக்குநர் குழுவில் இடம்பெறபோவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
விரைவில் முடிவு
இந்நிலையில், ஒரு பங்கின் விலை 54.20 டாலர் என்ற மதிப்பில் ட்விட்டரின் 100 சதவீதப் பங்கை 4,300 கோடி டாலருக்கு வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகம் கலந்தாலோசித்து வருவதாகவும் விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் தன்னுடைய ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் தன்னிடம் வேறு திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.