திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் , இடைத்தரகர்கள் மூலம் தலைக்கு 2000 ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டு அதிகாரிகள் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதாக குற்றஞ்சாட்டி திமுக பிரமுகர் ஒருவர் கோவிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது…
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனத்திற்கு வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள்.
இந்த கோயிலில் செந்தில் ஆண்டவரை தரிசிக்க 250 ரூபாய் சிறப்பு தரிசனமும் 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டணம் தரிசனமும் பொது தரிசனமும் நடைமுறையில் இருந்து வந்தது.
கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடவுள் மட்டுமே விஐபி எனக்கூறி ரு 250 விஐபி தரிசனம் மற்றும் 20 ரூபாய் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது.
அதுமட்டுமில்லாமல் தினமும் ஆயுதப்படை காவலர்களை சுழற்சிமுறையில் பணியில் அமர்த்த உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து 100 ரூபாய் கட்டண தரிசனமும் மற்றும் பொது தரிசனமும் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்கு வந்திருந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மீறி கோவில் அதிகாரிகள் பக்தர்களிடம் ஆளுக்கு 2000 ரூபாய் வரை பணத்தை கையூட்டாக பெற்றுக்கொண்டு சண்முகவிலாஸ் மண்டபம் பகுதி வழியாக வசதி படைத்த பக்தர்களை விஐபி போல தரிசனத்திற்கு அனுப்பி வைத்ததால் சல சலப்பு ஏற்பட்டது
நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்னையில் இருந்து வந்திருந்த திமுக பிரமுகர் ஒருவர், பணம் பெற்றுக் கொண்டு சிலரை மட்டும் உள்ளே விடுவது ஏன் ? எனக்கேட்டு பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய தனியார் காவலாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .
நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த வேண்டிய காவலல் துறையினரும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி இருந்ததால் பக்தர்கள் வேதனை தெரிவிக்கும் நிலை உண்டானது.
சம்பவத்தை செய்தியாளர்கள் படம் பிடிக்கும் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் , சண்முக விலாச மண்டபத்தில் கூடியிருந்த வசதி படைத்த பக்தர்களை விரட்டினர்.
காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட அற நிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.