விஷு பண்டிகையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவனந்தபுரம், 
கேரளாவில் விஷு பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விஷு கனி தரிசனம் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. விஷூ கனி தரிசனம் காண சபரிமலையில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 4.25 மணி முதல் 7 மணி வரை கனி காணல் சடங்கு நடந்தது. தொடர்ந்து கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை வழங்கினர். அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதே போல் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடை அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கினார். இதேபோல் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் கனி காண சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக வீடுகளில் பூஜை அறைகளில் வைக்கப்பட்ட கனி காணும் நிகழ்ச்சியில் கேரள மக்கள் பங்கேற்றனர். அங்கு பெரியவர்களிடம் ஆசி பெற்ற பிறகு குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.