போர்க் கப்பல் தகர்க்கப்பட்டதால் ரஷ்யா ஆத்திரம் – உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் தீவிரம்

மாஸ்கோ: உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் ரஷ்யாவின் அதிநவீன மாஸ்க்வா போர்க்கப்பல் தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 51-வது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய கடற்படையை சேர்ந்த அதிநவீன மாஸ்க்வா போர்க்கப்பல் கருங்கடல் பகுதியில் முகாமிட்டு உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது. இந்த போர்க்கப்பலில் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ராணுவம் நேற்று அதிகாலை நடத்திய ஏவுகணை தாக்குதலில் மாஸ்க்வா போர்க்கப்பல் தகர்ந்து, கடலில் மூழ்கிவிட்டது. போர்க்கப்பலில் இருந்த 510 பேரில் 452 பேர் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மர்ம ஏவுகணை தாக்குதலில் மாக்ஸ்வா போர்க்கப்பல் சேதமடைந்துள்ளது. கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பலில் இருந்த அணு ஆயுதங்கள் கடலில் மூழ்கியிருப்பதால் கதிர்வீச்சு ஆபத்து ஏற்படலாம் என்று சர்வதேச நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாஸ்க்வா போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது நேற்று தீவிர ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவின் பல்வேறு ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன. மேரிபோல் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பல்கள் உக்ரைன் கடல் பகுதியில் இருந்து 80 மைல்தொலைவுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்ய அரசு ஊடகமான “ரஷ்யா 1” என்ற தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் ஒல்கா கூறும்போது, “மாஸ்க்வா போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதன் மூலம் 3-ம் உலகப்போர் தொடங்கிவிட்டதாகவே கருதுகிறேன். உக்ரைன் தலைநகர் கீவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வந்து செல்கின்றனர். கீவ் மீது ஒற்றை குண்டு வீசுவதன் மூலம் இதனை தடுக்க முடியும்” என்றார்.

இதனிடையே, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் சார்பில் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நிறுத்திகொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.