தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் மும்பையில் உள்ள மட்டுங்கா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) தடம் புரண்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பையின் தாதர் டெர்மினஸில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் இரவு 9.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சாளுக்யா எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்எம்டி கடக் எக்ஸ்பிரஸ் இடையே மட்டுங்கா ரயில் நிலையம் அருகே சிறிய அளவில் மோதியதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது, இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மூத்த ரயில்வே அதிகாரிகள், “நாங்கள் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றுகிறோம். இதுவரை யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை. மற்றபடி புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன” என்று கூறினார்கள்.
இந்த சம்பவத்தினால் தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் மற்றும் சிஎஸ்எம்டி-கடக் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் அவசர கால உதவிக்காக 1512 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM