மதுரை:
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 12-ந்தேதி பட்டாபிஷேகமும், 13-ந்தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபம் இன்று காலை நடைபெற்றது.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர் தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
காலை 6.20 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். வண்டியூர் வீரராகவப் பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதை காண குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.