சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அன்றைய தினம் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் செல்ல தொடங்கிவிட்டனர்.
மேலும் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை திருவண்ணாமலை நகரம் பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலப் பாதையில் இடைவெளியின்றி பக்தர்கள் சென்று வருகின்றனர்.
சில பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா “என்ற பக்தி கோஷம் முழங்கி செல்கின்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவசநிலையில் அண்ணாமலையாரை வணங்கியபடி செல்கின்றனர். கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
2 ஆண்டுக்கு பின்னர் சித்ரா பவுர்ணமி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் வியாபாரமும் களை கட்டியுள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்…
சனி பகவானின் நல்லருளை பெறுவதற்கான சிறந்த பரிகாரங்கள்