பெங்களூரு: கர்நாடகாவில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கு 40 சதவீத கமிஷன் கேட்பதாக புகார் கூறிய ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் (40) அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனால் ஈஸ்வரப்பா அவர் மீது வழக்கு தொடுத்த நிலையில், கடந்த 12ம் தேதி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் ஈஸ்வரப்பாவை கண்டித்து காங்கிரஸ், மஜத, ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் காங்கிரஸார் மனு அளித்தனர். இதையடுத்து உடுப்பி போலீஸார் தற்கொலைக்கு தூண்டியதாக ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் இரவு 8.30 மணியளவில் பெங்களூருவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டுக்கு சென்ற ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
நிரபராதி என நிரூபிப்பேன்
பின்னர் ஈஸ்வரப்பா, ”எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் நிரபராதி என நிரூபித்த பிறகு மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்பேன். இந்த வேளையில் எனக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”என்றார்.
காங். எம்எல்ஏக்கள் போராட்டம்
இதனிடையே ஈஸ்வரப்பாவை கைது செய்யக்கோரி முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சித்தராமையா, ‘‘சந்தோஷ் பாட்டீல் அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் அவரது மரணத்துக்கு ஈஸ்வரப்பாவே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. அதன் காரணமாகவே அவர் மீது வழக்கு போடப்பட்டு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸார் உடனடியாக ஈஸ்வரப்பாவை கைது செய்து விசாரிக்க வேண்டும். அவரை கைது செய்யும்வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.