ஒன்றாக அமர்ந்த பாஜக, அதிமுக-வினர்… தனியே சென்ற பாமக-வினர்! – ஆளுநரின் தேநீர் விருந்துத் துளிகள்

சித்திரை முதல் நாளும், தமிழ்ப் புத்தாண்டையும், பாரதியார் சிலை திறப்புவிழாவையும் முன்னிட்டும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளித்தார். முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்புச் சென்றது. முதன்முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க என தி.மு.க கூட்டணியிலுள்ள அத்தனைக் கட்சிகளும் தேநீர் விருந்தைப் புறக்கணித்தன. நீட் குறித்து இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் விருந்தைப் புறக்கணித்ததாக காரணம் கூறினர்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில்…

கூட்டணிக் கட்சிகள் எல்லாமே புறக்கணிக்க, தி.மு.க மட்டும் கலந்துகொண்டால் அவப்பெயர் ஏற்படும் என்பதால், தி.மு.க சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் ஆளுநரிடம் நேரடியாகவே சென்று சொல்லிவிட்டுவந்தனர்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில்…

“யார் புறக்கணித்தாலும் அ.தி.மு.க புறக்கணிக்காது” என்று அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சொல்லியதற்கேற்ப, அக்கட்சியிலிருந்து எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகிய நான்கு எம்.எல்.ஏ-க்கள் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், குஷ்பூ ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசனும் கலந்துகொண்டனர்.

இதேபோல், பா.ம.க சார்பில் எம்.எல்.ஏ-க்கள் சதாசிவம், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவிர, நீதிபதிகள், ராஜ் பவனில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். எல்லோருக்கும் ரவுண்ட் டேபிள் போடப்பட்டிருந்தது. மேடையில் ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இருந்தனர்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில்…

பா.ம.க பங்கேற்றதன் நோக்கம் என்ன? என்பது குறித்து அக்கட்சியின் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ சதாசிவத்திடம் கேட்டோம். “எங்கள் கட்சித் தலைமையில் இருந்து கலந்துகொள்ளச் சொன்னதால் நாங்கள் பங்கேற்றோம். மற்றபடி, தி.மு.க கலந்துகொள்ளாததற்குக் குறிப்பிட்டிருக்கிற காரணங்கள் அத்தனையும் நியாயமானவைதான். இனியாவது ஆளுநர் நீட் தேர்வு குறித்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும்” என்றார்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில்…

ராஜ் பவனில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து பவன் ஊழியர்கள் தரப்பில் பேசினோம். “அ.தி.மு.க, பா.ஜ.க தலைவர்கள் ஒன்றாக அமர்ந்திரக்க, பா.ம.க-வினர் தனியாக சென்று அமர்ந்துகொண்டனர். ஒருபக்கம் திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு, இன்னொருபக்கம் தேநீர் விருந்திலும் கலந்துகொள்ள தலைமை அறிவுறுத்தியதால் வேறுவழியின்றி தனியாகச் சென்றனர்.

தேநீர் விருந்தின்போது பொதுவாக மேடையில் ஆளுநர் சில நிமிடங்கள் பேசுவார். இந்தமுறை, ஆளுநரின் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தியதுமே, நிகழ்ச்சியை முடித்த ஆளுநர், மேடையிலிருந்து இறங்கினார். பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, விருந்தினர்கள் அமர்ந்திருந்த ரவுண்ட் டேபிள்கள் அருகே சென்று, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கம் வைத்துக்கொண்டிருந்தார்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில்…

அப்போது சில எம்.எல்.ஏ-க்கள், “நீங்கள் ஏன் இன்னும் தமிழ் கற்றுக்கொள்ளவில்லை?’ என்று கொக்கிப்போட, உஷாரான ஆளுநர், “அடுத்த ஆண்டு கண்டிப்பாக கற்றுக்கொண்டு, தமிழில் பேசுவேன்” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு நடையைக்கட்டினார்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில்…

ஆளுங்கட்சி சார்பில் முதல்வரோ, அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ வராத நிலையில், ராஜ்பவன் பணியாளர்களுக்கும் தேநீர் விருந்தளித்தார் ஆளுநர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.