பஞ்சாபில் ஜூலை முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆட்சி பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று செய்தித்தாள்களில் ஆம் ஆத்மி அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 2021இல் பஞ்சாப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகையில், டெல்ல முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த முதல் வாக்குறுதி தான் மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம். இதே வாக்குறுதியை தான், டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசு பின்பற்றியது. இதற்கு முன்பு, பஞ்சாப் மக்கள் தான் நாட்டிலேயே மின்சாரத்திற்கு அதிக கட்டணம் செலுத்தி வந்தனர்.
ஒரு மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கிறது. அதற்கு மேல் பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்த வேண்டும். திட்டத்தின் மூலம், மாநிலத்தில் உள்ள 73.80 லட்சம் உள்நாட்டு நுகர்வோரில், கிட்டத்தட்ட 62.25 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிகிறது.
சமீபத்தில் டெல்லியில் கேஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் அதிகாரிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் போது, இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை முதலில் மாநில அமைச்சரவையில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அதனை செயல்படுத்துவதாக ஏப்ரல் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஜூலை 1 முதல் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிதியாண்டின் முதல் காலாண்டில் பஞ்சாப் அரசு சுமார் 2,000 கோடி ரூபாயைச் சேமிக்கும். அதேபோல், ஆண்டுக்கு, அரசின் பில் ரூ.5,500 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பஞ்சாபில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் இலவச மின்சாரம் கிடைக்கிறது. உள்நாட்டு நுகர்வோருக்கு ரூ.4,000 கோடி மானியம் கிடைக்கிறது. 7 கிலோவாட் வரை மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு, ஒரு யூனிட் ரூ.1.19க்கு விற்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கடந்த நவம்பர் மாதம் மின்சார விலையை யூனிட்டுக்கு ரூ.3 குறைத்தார். அனைத்து உள்நாட்டு நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.19 வசூலிக்கப்படும் என தெரிவத்தார். முன்பு, அந்த யூனிட்டின் விலை 4.19ஆக இருந்தது. அதேபோல், 300 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.76 வசூலித்த நிலையில், அந்த கட்டணம் ரூ.5.76 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.