தாயுடன் காதல்… மகள்கள் மீது மோகம்- விதவை பெண்களை குறி வைக்கும் கும்பல்

பெண் பிள்ளைகளை பெற்று… பாதுகாப்பாக வளர்த்து சேர்ப்பதற்குள் இன்றைய பெற்றோர் படாதபாடு பட வேண்டி இருக்கிறது.

பெண் குழந்தைகள் மீது பரிவும்… பாசமும் காட்டும் சமூகத்தின் மத்தியில் இன்று வக்கிர எண்ணம் கொண்ட பலர் சிறுவயது என்று கூட பார்க்காமல் பெண் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால் பெண் குழந்தைகளை இன்றைய கால கட்டத்தில் பொத்தி பொத்தியே வளர்க்க வேண்டிய பெரும் சுமைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றே கூறலாம். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்…. பள்ளி ஆசிரியர்கள்… கல்லூரி பேராசிரியர்கள் என பெண் பிள்ளைகள் பல வழிகளிலும் இன்று பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது தொடர் கதையாகவே மாறி இருக்கிறது.

இப்படி திரும்பிய திசையெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிப்படையாகவே கண்கூடாக தெரிகிறது.

அதே நேரத்தில் பெண் பிள்ளைகளை பெற்று ஆசை ஆசையாய் வளர்த்த தாய்மார்களாலேயே இன்று அந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை பரவலாகி இருக்கிறது. ஒரு காலத்தில் கணவனை இழந்த அல்லது பிரிந்த பெண்கள் மீது சுற்றி இருக்கும் சமூகம் அதிக அக்கறை காட்டியது.

“புருஷன் இல்லாத பொம்பளடா”…. என்று கூறி எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி அவர்களுக்கு உதவி செய்த காலம் போய்… இன்று விதவைப் பெண்களையும், கணவரை பிரிந்து வாழும் இளம் தாய்மார்களையும் குறி வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடும் கும்பலின் ஆதிக்கம் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படி இளம் விதவைப் பெண்களை குறி வைத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தும் வாலிபர்கள், பின்னர் அந்த பெண்ணுக்கு கணவன் என்கிற அந்தஸ்தையும் அடைந்து விடுகிறார்கள். இதனை கணவரை பிரிந்து வாழும் விதவைப் பெண்கள் பலர் சமூக பாதுகாப்பாகவே உணர்கிறார்கள்.

ஆனால்… இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் “நாகப்பாம்பு போன்ற நச்சு” மறைந்திருப்பதை அவர்கள் உணர்வது இல்லை.

கணவரை இழந்த பெண்கள் மீது கரிசனம் காட்டுவது போல நடித்து அந்த பெண்களின் சிறுவயது பெண் குழந்தைகளுக்கு பாதுகாவலர்களாகவும் மாறி விடும் ஆண்களில் பலர் உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறார்களா? என்றால் இல்லையென்றே பதில் வருகிறது.

தந்தையை இழந்து தவிக்கும் சிறு வயது பெண் குழந்தைகளுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து ஒருவர் அனைத்து உதவிகளையும் செய்வது என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இப்படி தந்தையாக இருந்து பாசம் காட்டியவர்களின் இன்னொரு முகம் திடீரென அதிர்ச்சி அளிப்பதாக மாறினால் எப்படி இருக்கும்? அந்த நிலையில்தான் இன்று பல வீடுகளில் தந்தையை இழந்த சிறுமிகள் பலர் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனி… இவர்தான் நமக்கு அப்பா. நல்லது கெட்டதையெல்லாம் அவரே பார்த்துக் கொள்வார் என்று தாயால் அடையாளம் காட்டப்பட்ட நபர் திடீரென காமப் பார்வையை வீசினால் குழந்தைகளின் உடலும்.. மனசும் எப்படி தாங்கி கொள்ளும்.

நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது. இப்படித்தான் இன்று…. கணவரை இழந்த பெண்களின் மீது காதல் கொண்டு மகள்கள் மீது மோகம் கொள்ளும் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ராயபுரத்தில் கணவரை இழந்த 3 பெண் குழந்தைகளின் தாய்க்கு 2-வது கணவராக இருந்த வாலிபர் ஒருவர் 3 பெண் பிள்ளைகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே போன்று பல பாலியல் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் இது போன்ற பாலியல் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டதோ? என்று எண்ண தோன்றும் அளவுக்கு நிலைமை மாறி  இருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.

இன்றைய கால கட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது வாழ்க்கை முழுக்க போடப்பட்ட பந்தம் என்கிற நிலையில் இல்லை. சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக கூட மண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் மனநிலைக்கே பலரும் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குடும்ப நல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகளும் குவிந்து கிடக்கின்றன.

திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து சென்று விடுவது என்பது இன்று பெரிய  விஷயமாகவே தெரியவில்லை. திருமணமாகி குழந்தை பிறந்த விட்டால் கணவன்-மனைவிக்கு இடையே நிலவும் சச்சரவுகள் தீர்ந்து விடும் என்பார்கள். ஆனால் குழந்தைகளை பற்றி கவலைப்படாத நிலையில் சில பெற்றோர்களும் இருக்கிறார்கள். தங்களது பிள்ளைகளை தவிக்க விட்டு விட்டு தாயோ… தந்தையோ வேறு ஒருவருடன் ஓடிப்போகும் சம்பவங்களும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறது.

குறிப்பாக கணவரை இழந்த பின்னரோ… அல்லது பிரிந்த பின்னரோ இந்த சமூகத்தில் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை பாதுகாப்பாற்ற நிலைக்கே தள்ளப்படுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இன்றைய நாகரீக சமூகத்தில் ‘வக்கிரம்’ பரவி கிடக்கிறது. கணவர் இல்லாத பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பழகுவது… அவர்களது ஏழ்மை மற்றும் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வது என இன்று விதவைப் பெண்களை குறி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

எனவே கணவரை இழந்த தாய்மார்கள் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மிகவும் உஷாராக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவே மாறி இருக்கிறது. தங்களது நலன் கருதி 2-வது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்கள், தங்கள் பெண் பிள்ளைகளின் பாலியல் பாதுகாப்பு விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும் என்பதையே தொடர்ந்து அரங்கேறி வரும் பாலியல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.