அல்ஜீரிய நபர் ஒருவர் லொட்டரியில் பெருந்தொகை பரிசாக வென்ற நிலையில், புலம்பெயர்ந்தவர் என்பதால் குறித்த தொகையை கைப்பற்ற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அல்ஜீரிய நாட்டவரான குறித்த 28 வயதான நபர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பெல்ஜியத்தில் புலம்பெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் 5 யூரோவுக்கான லொட்டரி சீட்டு ஒன்றில் அவர் 250,000 யூரோ பரிசை வென்றுள்ளார்.
100,000 யூரோவுக்கும் அதிகமான பரிசு தொகைக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.
தற்போது அவரிடம் உரிய ஆவணங்களோ நிரந்தர முகவரியோ இல்லாத நிலையில் வங்கிக்கணக்கும் துவங்க முடியாமல் போயுள்ளது.
மேலும், நண்பர் ஒருவர் மூலம் பரிசு தொகையை கைப்பற்ற முயன்று, சந்தேகத்தின் பேரில் அவரும், மேலும் இருவரும் பெல்ஜியம் பொலிசாரால் கைதாகியுள்ளனர்.
ஆனால், பரிசுக்கு உரிமையாளரான அந்த அல்ஜீரிய நாட்டவர் உண்மையை விளக்கியுள்ளதை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பரிசுக்கு காரணமான லொட்டரி சீட்டானது தற்போது ப்ரூக்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் உள்ளது.
குறித்த தொகை அந்த நபருக்கு அளிக்கப்படுமா என்பதில் இன்னமும் முடிவு தெரியாத நிலையில், எதிர்காலம் கருதி தாம் பிரித்தானியாவுக்கு செல்ல இருந்ததாகவும்,
ஆனால் தற்போது பெல்ஜியத்தில் தங்கவே முடிவு செய்துள்ளதாகவும், லொட்டரியில் வென்ற பணத்தில் வீடு ஒன்றை வாங்கவும் குடும்பத்துடன் பிரஸ்ஸல்ஸில் வசிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பரிசு தொகை அவரது கைவசம் கிடைக்கும் வரையில், அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற மாட்டோம் எனவும், அவரது அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்களை நாங்கள் தேடி வருகிறோம் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.