மாஸ்கோ
ரஷியா உக்ரைன் போர் 52 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் கருங்கடல் பகுதியில் ரஷியாவின் முக்கிய போர்க்கப்பலான மொஸ்க்வா வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாக ரஷியா தெரிவித்தது. மேலும் கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்தது.
ஆனால் உக்ரைன் ராணுவமோ தனது நெப்டியூன் ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான மொஸ்க்வாவை தாக்கி அழித்ததாக கூறுகிறது.
இந்நிலையில், ரஷிய தொலைக்காட்சி ஒன்று தற்போது நடப்பது மூன்றாம் உலகப்போர் என தெரிவித்துள்ளது. ரஷியாவின் ஊடகமான ரஷ்யா 1 தொலைக்காட்சி கூறியதாவது:-
இத்தனை நாட்களாக நடந்து வரும் போர் உக்ரைனுக்கு எதிரான போர் இல்லை, நேட்டோ நாடுகளுக்கு எதிரான போர். மாஸ்கோவா கப்பல் மூழ்கியதற்கு பின் இந்த போர் தீவிரமடைந்திருப்பதை நாம் நிச்சயம் மூன்றாம் உலகப்போர் என்று தான் அழைக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளது.