தமிழ் புத்தாண்டில் விமானத்தில் ஒலித்த தமிழ் கவிதை; துணை விமானிக்கு குவியும் பாராட்டு

Passengers praises Indigo pilot who wish Tamil new year with Tamil poetry: தமிழில் கவிதை பாடி விமான பயணிகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இண்டிகோ துணை விமானிக்கு பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை விமானி ப்ரிய விக்னேஷ் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது இண்டிகோ நிறுவனத்தில் துணை விமானியாக பணியாற்றி வருகிறார். இவர், சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற விமானத்தில், துணை விமானியாக இருந்தபோது, தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டதோடு, ஒத்தக்கடை நரசிங்க பெருமாள், வைகை ஆறு உள்ளிட்ட இடங்களின் மேல் விமானம் பறந்த போது, அவற்றின் சிறப்புகளை தமிழில் அறிவித்து பயணிகளின் கவனத்தை ஈர்த்தார். இதற்காக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தமிழ் புத்தாண்டு அன்று இண்டிகோ விமானத்தில் பறக்கும் முன்னர், விமான பயணிகளிடம் தமிழில் கவிதை புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

விமான பயணிகளிடம் அவர் இந்த நன்னாளில் உங்களுக்கு ஒரு கவிதையை வாசிக்க விரும்புகிறேன் எனக் கூறி, “தமிழும் அவளும் ஓரினம்… எங்கள் வீட்டில் புராதனமாய் எனது பாட்டி கால் இரண்டையும் நீட்டி இப்படி தான் அறிமுகப்படுத்தினாள் தமிழ் மாதங்களை எனக்கு… சித்திரையில் சிங்காரித்து வைகை ஆற்றில் வாராரு அழகர் ஐயா” என தொடங்கும் அழகான கவிதையை வாசித்தார். இதைக் கேட்டு அங்கிருந்த பயணிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் காயம்.. 2 பேர் உயிரிழப்பு!

பின்னர் இது குறித்து ப்ரிய விக்னேஷ் கூறுகையில், தமிழின் பெருமைகளை பயணிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு அன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்படும் முன், நான் எழுதிய ஒரு நிமிட வாழ்த்து கவிதையை பாடினேன். அதை பயணியர் பலர் வீடியோ எடுத்து பாராட்டினர். இந்த வீடியோவை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளனர். இதேபோல், சென்னை – துாத்துக்குடி விமானத்திலும் இதே கவிதையை பாடினேன். இன்று போல் என்றும் என் தமிழ் பணிகள் தொடரும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.