பீகார்: பீகார், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. மேற்குவங்கம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு: பீகார், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 4 எல்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. பீகாரில் ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி தோல்வி:பீகாரில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் வெற்றி பெற்று ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது. பீகாரில் பக்சோஹன் தொகுதியில் பாஜக வேட்பாளரை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் தோற்கடித்தார். மேற்குவங்க இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி:மேற்குவங்க சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றிபெற்றார். பாபுல் சுப்ரியோ வென்ற பல்லிகஞ்ச் தொகுதியில் மார்க்சிஸ்ட் 2ம் இடத்தை பிடித்தது; பாஜக 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. பாஜகவில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு தாவிய பாபுல் எம்.பி. பதவியிலிருந்து விலகி எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றிபெற்றார். மேற்குவங்கத்தில் எம்.பி. தேர்தலில் திரிணாமுல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா 2.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சத்திஸ்கர், மராட்டியத்தில் காங்கிரஸ் வெற்றி:சத்திஸ்கர், மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.