மாஸ்கோ:
உக்ரேனிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் ரஷிய ராணுவ வீரர் ஒருவருக்கு அவரது மனைவி தொலைபேசியில் அனுமதி தரும் ஆடியோ சில நாட்கள் முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐரோப்பாவின் ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா/ ரேடியோ லிபர்ட்டி என்ற பத்திரிகை நடத்திய விசாரணையில் தொலைபேசியில் பேசியவர்கள் ரோமன் பைகொவோஸ்கி மற்றும் அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயா என தெரிய வந்துள்ளது.
அவர்களுடைய தொலைபேசி எண்களை உக்ரைன் அதிகாரிகள் மூலம் பெற்ற பத்திரிகையாளர்கள் அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருவருடைய புகைப்படங்களை கண்டுபிடித்தனர். இருவரும் உண்மையான கணவன் மனைவி தான் என்பதையும், ரோமன் பைகோவோஸ்கியின் தாய் உறுதி செய்தார். மேலும் ரோமன் ரஷிய ராணுவத்தில் பணி புரிவதாகவும் கூறினார்.
இதுகுறித்து ரோமனை அழைத்து பேசிய போது தற்போது அவர் சேவஸ்தோபோல் என்ற இடத்தில் இருப்பதாக கூறினார். அவரது மனைவியும் தனது கனவர் சேவஸ்தோபோலில் இருப்பதை உறுதி செய்தார். மேலும் தன் கணவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார். ஆனால் இருவரும் அந்த ஆடியோவில் பேசியது தாங்கள் தான் என ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் உக்ரேனிய அதிகாரிகள் இருவருடைய குரலும், ஆடியோவில் வெளியான குரலும் ஒரே போன்று இருப்பதை உறுதி செய்துள்ளனர்.