புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநரை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் போட்டி சர்க்காரை நடத்துவது ஜனநாயக விரோதச் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
“புதுச்சேரியில் அதிகார அத்துமீறல் புரியும் பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், புதுச்சேரி மாநிலத்துக்கென்று நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் இன்று (ஏப். 16) நடைபெற்றது. புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், திராவிடர் கழகம், மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தனது பதவிக்கான வேலையை கடந்து கட்சி வேலை செய்யும் துணைநிலை ஆளுநர் தமிழிசையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரிக்கு பொறுப்பு துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. மாநிலத்துக்கு ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. ஆனால், புதுச்சேரிக்கு ஒரு நிரந்தரமான ஆளுநரை நியமனம் செய்யாமல், தமிழிசையைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஒரு போட்டி சர்க்காரை நடத்துவது ஜனநாயக விரோதச் செயலாகும். மத்திய அரசு உடனடியாக தமிழிசையை திரும்ப பெற வேண்டும்.
நிரந்தரமாக துணைநிலை ஆளுநரை நியமனம் செய்ய வேண்டும். அதேபோல், புதுச்சேரிக்கான நிதிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமியை சுதந்திரமாக செயல்பட செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். நீட் தேர்வு கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அதற்கு விதிவிலக்கு வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மறுபடியும் சட்டப்பேரவை கூட்டி மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என்ற காரணத்தினால் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் நிராகரித்துள்ளன. எனவே, ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் மாளிகை தேனீர் விருந்தில் தமிழக அரசும், மிக முக்கியமான கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை. இதை ஒரு சுயவிமர்சனமாக எடுத்துக் கொண்டு தங்களது தவறை திருத்திக்கொள்வதற்கு மாறாக, கிண்டலும், கேலியும் பேசுகிற வகையில் நிதி மிச்சம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
பொறுப்பில்லாத அவர் பொறுப்பற்ற முறையில் எதை வேண்டுமானாலும் பேசுவார். இந்த விருந்துக்கான பில் வந்தவுடன் நிதி மிச்சமானதா, இல்லையா என்று பேசிக் கொள்கிறேன் என தமிழக நிதித்துறை அமைச்சரும் கூட தெரிவித்துள்ளார்.”
இவ்வாறு முத்தரசன் கூறினார்.