விவசாயிகளுக்கு ஓராண்டில் ஒரு இலட்சம் மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் தமிழகம் வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓராண்டில் ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், ஒரு இலட்சமாவது விவசாயிக்கு மின்னிணைப்பு வழங்கிய நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மின்னிணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் கலந்துரையாடினார்.
ஒரு இலட்சமாவது மின் இணைப்புக்கான ஆணையை உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் பிள்ளை என்கிற விவசாயிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஒரு லட்சம் மின்னிணைப்பால் விவசாயிகள் குடும்பம் பயனடைவது மட்டுமல்லாமல், வேளாண் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்கும் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னதாகப் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் தடை இல்லாத மாநிலமாகத் தமிழகம் இருக்கும் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, கலைஞரைப் போன்று மு.க.ஸ்டாலினும் விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.