“தமிழகத்தின் பெருமையை மெச்சும் வகையில், ஆந்திராவில் பணியாற்றுவேன்” – அமைச்சர் ரோஜா பேட்டி

மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வகையில் தாய் வீடான ஆந்திராவில் பணியாற்றுவேன் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்த திரைப்பட நடிகை ரோஜா, ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றிய பின் வெளியே வந்த அமைச்சர் ரோஜாவை, பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

image

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, தாய் வீடான ஆந்திராவில் தன்னை, சுற்றுலா, விளையாட்டு, கலாச்சாரத் துறை அமைச்சராக நியமித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாமியார் வீடான தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தான் அமைச்சராக வர வேண்டும் என வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் தமிழக மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகனை தெரிவித்த அவர், ஆண்டுதோறும் காமாட்சி அம்மனை வந்து தரிசனம் செய்து வருவதாகவும் எந்த ஒரு காரியத்திற்கும் காமாட்சி அம்மனிடம் வேண்டி செல்வது வழக்கம் என்றும் ரோஜா கூறினார். குழந்தையே பிறக்காது என தெரிவித்த நிலையில், காஞ்சி காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்டதின் பேரில் தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதனால் காமாட்சி அம்மன் மீது பக்தி அதிகமாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

image

தற்போது அமைச்சர் ஆகியுள்ள நிலையில், காமாட்சி அம்மனை தரிசித்து, குங்குமம் அர்ச்சனை செய்து ஆசிகளை பெற்றுக்கொண்டு, இரட்டை மகிழ்ச்சியோடும், இரட்டை புத்துணர்ச்சியோடும் மக்களுக்கு சேவை செய்ய சென்று கொண்டிருப்பதாக ரோஜா கூறியுள்ளார்.

தனக்காக யார் யார் வேண்டிக்கொண்டார்களோ, ஆசி வழங்கினார்களோ, அவர்களுக்கெல்லாம் மறுபடியும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்த அவர், மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வகையில், தாய்வீடான ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.