பிரான்சில் இந்தத் தேர்தலில் தன்னால் வெற்றி பெற முடியும் என்று முக்கிய அப்பெண் வேட்பாளரான லு பென் உறுதியாக தெரிவித்துள்ளார்.
பிரான்சின் உயர்மட்ட பதவியை ஏற்பதற்கான இரண்டாம் கட்டத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முக்கிய போட்டியாளரான மரீன் லு பென் (Marine Le Pen), இந்த தேர்தலில் தன்னால் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 15) தெற்கு பிரான்சில் உள்ள மக்ரோனுக்கு அதிக ஆதரவு உள்ள ஒரு நகரத்திற்குச் சென்றபோது இவ்வாறு கூறினார்.
லு பென் ஆதரவாளர்களாலும் எதிர்ப்பாளர்களாலும் வரவேற்கப்பட்டதால் அவருக்கு கலவையான பதில் கிடைத்தது. எதிர்ப்பாளர்கள் அவரது குடும்பத்தை “இனவெறி” என்று கூறி அவரை அங்கிருந்து செல்லச் சொன்னார்கள்.
அதனைத் தொடர்ந்து, லு பென் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு பின்னால் மக்கள் உள்ளனர், அது ஜனநாயகத்தில் மிக முக்கியமான விடயம்” என்று அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் லு பென் வேட்பாளராக இருந்துள்ளார். அவர் பிரான்சில் முன்னெப்போதையும் விட மிகவும் பிரபலமானவர் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
தீவிர வலதுசாரி வேட்பாளரான லு பென் தனது தோற்றத்தை மென்மையாக காட்டி வருகிறார். அவர், பிரான்ஸ் மக்களின் தினசரி வாழ்க்கையில் அடிப்படை தேவைக்கான செலவுப் பிரச்சினைகளில் தனது பிரச்சாரத்தை முன்வைத்துள்ளார்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை யார் வழிநடத்துவார்கள் என்பதைத் தீர்மானிக்கும் இரண்டாவது தேர்தலுக்கு ஒன்பது நாட்கள் உள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் மத்தியவாத ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் லு பென்னை விட சற்று முன்னிலையில் இருப்பதாகக் காட்டுகின்றன.