இஸ்லாமிய பெண்கள் தலையில் அணியும் ஸ்கார்ஃப், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய விடயமாக மாறியுள்ள நிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் லீ பென்னின் வலதுசாரி ஆதரவு முகம் வெளிவருவதாகத் தெரிவித்துள்ளார் மேக்ரான்.
மேற்கு ஐரோப்பாவிலேயே அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழும் நாடு பிரான்ஸ். ஆனால், தங்கள் மதம் சார்ந்த ஒரு விடயம், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பிரச்சினையாக கருதப்படும் விடயம் இஸ்லாமியர்களுக்கு விருப்பமின்மையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் தற்போதைய ஜனாதிபதியாகிய இமானுவல் மேக்ரானை எதிர்த்துப் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரான மரைன் லீ பென், தான் ஜனாதிபதியானால், பொது இடங்களில் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதிக்க இருப்பதாகவும், தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேக்ரான் அப்படி எதுவும் கூறவில்லை என்றாலும், அவரது அரசு தீவிரவாத இஸ்லாமியக் கருத்துக்களுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறி பல மசூதிகளை மூட உத்தரவிட்டது.
ஆகவே, இஸ்லாமியர்களின் ஆதரவு அவர்கள் இருவருக்குமே இல்லை.
இதற்கிடையில், நேற்று ஜனாதிபதி வேட்பாளரான லீ பென்னை நெருங்கிய இஸ்லாமியப் பெண் ஒருவர், அரசியலில் எங்கள் ஸ்கார்ஃபுக்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்கார்ஃப் என்பது தீவிரப் பார்வை கொண்டவர்களால் திணிக்கப்பட்ட ஒரு சீருடை என பதிலளித்தார்.
அது உண்மையியில்லை என்று கூறிய அந்தப் பெண், நான் இந்த ஸ்கார்ஃபை வயதான பிறகுதான் அணியத் துவங்கினேன், என்னைப் பொருத்தவரை, அது பாட்டியாக இருப்பதற்கான ஒரு அடையாளம் என்றார்.
அத்துடன், தனது தந்தை பிரான்ஸ் இராணுவத்தில் 15 ஆண்டுகள் சேவை செய்ததையும் குறிப்பிடத்தவறவில்லை அந்தப் பெண்.
லீ பென்னைப் போலவே, மேக்ரானும் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது இஸ்லாமியப் பெண்களை எதிர்கொள்ள நேர்ந்ததையும் மறுப்பதற்கில்லை.
ஆக, இஸ்லாமிய பெண்கள் தலையில் அணியும் ஸ்கார்ஃப், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அது தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.