ரஷ்யா உக்ரைன் போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகின. மேலும் இந்த சந்திப்பு குறித்து போரிஸ் ஜான்சன் கூறும்போது, “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உறுதியான தலைமை, உக்ரைன் மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன்’’ என்றார்.
இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிரான இங்கிலாந்தின் நிலைப்பாடு காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் மற்றும் சில மூத்த அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான அமைச்சரவை உறுப்பினர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.