புதுடெல்லி:
2024 பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் அணியை உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. ஆனால், இந்த அணியில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக டெல்லியில் இன்று சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் செயல்திட்டம் தொடர்பான விளக்க அறிக்கையை வழங்கி உள்ளார். எனவே, காங்கிரசின் தேர்தல் வியூகப் பணி பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைக்கப்படலாம் என பேசப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா கூறுகையில், பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் சவால் அளிக்கக்கூடிய ஒரே தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும்தான், என்றார்.
‘பழம்பெரும் கட்சியால் (காங்கிரஸ்) நாட்டிற்கு மாற்றை கொடுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி இறந்துபோன குதிரை போன்றது. இறந்த குதிரையை சாட்டையால் அடிப்பதில் அர்த்தமில்லை’ என்றும் ராகவ் சதா கடுமையாக சாடினார்.