கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய சத்ருகன் சின்கா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை வென்ற தொகுதியை பாஜக தற்போது பறி கொடுத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் பிஹார் மாநிலம், பாட்னா தொகுதி பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்கா நீண்டகாலமாக அக்கட்சியில் செல்வாக்குடன் இருந்த வந்தார். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு பாஜக தலைமையுடன் நல்ல உறவு இல்லாமல் இருந்தது.
பிரதமர் மோடியையும், கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதையடுத்து அவரை கழற்றிவிட்ட பாஜக, அவரது பாட்னா தொகுதியில் 2019-ம் ஆண்டு தேர்தலில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தது.
இதையடுத்து சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு பெரிய அளவில் பதவி எதுவும் கிடைக்காத சூழலில் அண்மையில் அவர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
இதனிடையே மேற்குவங்க மாநிலம் அசன்சோல் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த பாபுல் சுப்ரியோ பதவியை ராஜிநாமா செய்து கட்சியிலிருந்து விலகி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அதே தொகுதியில் 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார். இந்தநிலையில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸுக்கு தாவியதை தொடர்ந்து பாபுல் சுப்ரியோ எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது.
காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சி சார்பில் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அசன்சோல் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். சத்ருகன் சின்கா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் அக்னிமித்ரா தோல்வியடைந்தார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை வென்ற தொகுதியை திரிணமூல் காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்துள்ளது.
இந்த தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா 6,52,586 வாக்குகள் பெற்றார். பாஜகவின் அக்னிமித்ரா 3,52,043 வாக்குகள் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பார்த்தா முகர்ஜி 89,864 வாக்குகள் மட்டுமே பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பிரசன்ஜித் 14,885 வாக்குகள் மட்டுமே பெற்றார்.