இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், கடந்த 2021 டிசம்பரில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்விற்குப் பிறகு அரசியலில் இணைவதற்காக, முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவைச் சந்தித்து ஆலோசித்திருந்தார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினராக (MP) தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தனது எம்.பி. பதவிக்கான சம்பளத் தொகையை விவசாயிகளின் மகள்களுக்கான கல்வி மற்றும் பிற நலன்களுக்கு வழங்குவதாகத் தற்போது தெரிவித்துள்ளார்.
இது பற்றி ட்வீட் செய்திருந்த அவர், “ஒரு மாநிலங்களவை உறுப்பினராக, விவசாயிகளின் மகள்களுக்கான கல்வி மற்றும் நலனுக்காக எனது சம்பளத்தை வழங்க விரும்புகிறேன். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் இணைந்துள்ளேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.