பாலிவுட் முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவும், பிரபல அமெரிக்க பாடகர், பாடலாசிரியரான நிக் ஜோனாஸும், வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தையை ஜனவரி மாதம் வரவேற்றனர். அப்போது, அந்த பெர்சனல் தருணத்தில் தங்களுக்கான பிரைவசியை எதிர்பார்ப்பதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அன்றிலிருந்து குழந்தையின் புகைப்படத்தைகூட சமூக ஊடகத்தில் அவர்கள் பதிவிட்டதில்லை. இந்நிலையில் முதன்முறையாக குழந்தை வளர்ப்பு குறித்து தன்னுடைய பார்வையை மனம் திறந்து பேசி உள்ளார், பிரியங்கா.
கனடாவை சேர்ந்த யூடியூப் பிரபலம் லில்லியின் புத்தகமான Be a Triangle: How I Went from Being Lost to Getting My Life Into Shape என்ற புத்தகத்தைப் பற்றிய உரையாடலின்போது, பிரியங்கா பேரன்டிங் குறித்துப் பேசினார். அதில், “என்னுடைய ஆசைகள், அச்சங்கள், என் வளர்ப்பு போன்றவற்றை என் குழந்தை மீது நான் ஒருபோதும் திணிக்கமாட்டேன். குழந்தைகள் நம் மூலம் வருகிறார்கள், நம்மிடமிருந்து வரவில்லை என்று நான் எப்போதும் நம்புகிறேன். இது என் குழந்தை, நான்தான் எல்லாவற்றையும் வடிவமைப்பேன் போன்ற நம்பிக்கை இல்லை. அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைக் கண்டுபிடித்து கட்டமைத்துக்கொள்ள உங்கள் மூலம் வருகிறார்கள். இந்த உண்மையை புரிந்துகொண்டது எனக்கு மிகவும் உதவியது” எனத் தெரிவித்துள்ளார்.