‘KGF – 2’ படம் உலகம் முழுவதும் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்து வருகிறது. இப்படத்திற்கு 19 வயதான ‘உஜ்வல் குல்கர்னி’ என்பவர்தான் எடிட்டிங் செய்தார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. KGF படத்தின் பாகம் 1, 2 ஆகிய இரண்டிலுமே படத்தின் எடிட்டிங், கதாபாத்திரங்கள், காட்சிகள் அசத்தலாக இருக்க, அது அத்தனைக்கும் தன் இசைமூலம் கூடுதலாக பிரமிப்பை ஊட்டி, உச்சத்திற்கே கொண்டு சென்றவர் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் (Ravi Basrur). இவர் தன் ஆரம்பகாலங்களில் சிற்பியாக இரும்புத் தொழில் செய்து பின்னர் தன் உழைப்பால் இசையமைப்பாளராக மாறியவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள குண்டாபுரா தாலுக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் எளிமையான பின்னனியில் இருந்து வந்தவர் ரவி பஸ்ரூர். இவர் தன் ஆரம்ப காலங்களில் தன் தந்தையின் பட்டறையில் சிற்பங்கள் செய்வது உள்ளிட்ட இரும்புத் தொழில் செய்து கொண்டிருந்தார். பின்னர் இசையமைப்பாளராகும் தன் கனவை விடாமல் துரத்தி இன்று பிரமிக்க வைக்கும் இசையமைப்பாளராக தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
‘கே.ஜி.எஃப்’ இயக்குநரான பிரசாந்த் நீல்தான் தன் முதல் படமான ‘உக்ரம்’ மூலம் ரவி பஸ்ரூரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பல கன்னடப் படங்களுக்கு இசையமைத்தவரை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றது ‘கே.ஜி.எஃப் 1’ படம்தான். அதன் பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் படம் வரை சென்றுவிட்டார் ரவி.
இத்தனை உயரங்களை அடைந்த பின்னும் மீண்டும் சாதாரணமாக அவர் தந்தையின் பட்டறையில் ரவி வேலை செய்யும் காணொலி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தக் காணொலியை அவர் லாக்டௌனின் போது, அதாவது ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாவதற்கு முன்னரே பகிர்ந்திருந்தார். அதில் ரூ.35 சம்பாதிப்பதற்காக தன் தந்தைக்குப் பட்டறையில் உதவியதாகவும், பணம் கிடைத்தவுடன் தன் தந்தை மகிழ்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
“கடவுள் நம் பழைய நினைவுகளை மறுபரிசீலனை செய்ய உதவுகிறார். நாம் அவருடைய கை பாவைகள்” என்றும் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். கோவிட் பெருந்தொற்று காலங்களில் இவர் பகிர்ந்த இந்த காணொலி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி ‘கே.ஜி.எஃப்’ பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.