வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வரும் 18 ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தன. பல மணி நேரம் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிபர் பதவியில் இருந்து கோத்தபயா விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால், பல மணி நேரம் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சரி செய்ய முதலீட்டாளர்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்காக கொழும்பு பங்குச்சந்தையை அடுத்த வாரம் நிறுத்துமாறு இலங்கையின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து ஏப்.,18 முதல் 22 வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement