இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகியப் படங்களுக்கு பிறகு, சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
‘மாமனிதன்’ படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்திற்காக பணியாற்றியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப்படம், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில காரணங்களால் ரிலீசாகாமல் இருந்தது. இந்தப் படம் வரும் மே 6-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் மே 20-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் கேரளா திரையரங்கு உரிமையை ஆர்.கே. சுரேஷின் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்பன் தோத்த ஊர்ல, பிள்ளைங்க ஜெயிக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை, கவர்மெண்ட் டீச்சரோட பிள்ளைங்களே இந்த கான்வென்ட்ல படிக்கிறப்ப, என் பிள்ளைங்க படிக்கக் கூடாதா” போன்ற வசனங்கள் கவனத்தை ஈர்க்கிறது.
நடிகர் விஜய்சேதுபதி, ஆட்டோ ஓட்டுநராக வருவதுடன், தனது குழந்தைகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்க, தந்தை படும்பாடு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுபோல் ட்ரெயிலரில் காண்பிக்கப்படுகிறது.