கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்திய திரிணாமுல் காங்கிரஸ், மேற்குவங்க மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு வலுவாக உள்ளது என்பதை இடைத்தேர்தலில் நிரூபித்துள்ளது. இன்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிய ஜனதா வசம் இருந்த அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பாலிவுட் நட்சத்திரம் சத்துருகன் சின்ஹா கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் பாஜக மக்களவை உறுப்பினராக இருந்த பாபுல் சுப்ரியோ, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவிலிருந்து விலகினார். பின்னர் தனது மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
சத்ருகன் சின்ஹாவும் ஒரு சமயத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிருப்தியால் பாஜகவை விட்டு வெளியேறிய சின்ஹா, ஆரம்பத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சியின் அக்னிமித்திரா பாலை பின்னுக்குத்தள்ளி, முன்னிலை வகித்து வந்தார். சின்ஹாவுக்கு வெற்றி உறுதி என்கிற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வெற்றியை அளித்த மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சின்ஹா ஹிந்தி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து அதிரடி வசனங்கள் பேசி பிரபலமானவர். இவரது மகள் சோனாக்ஷி சின்ஹாவும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்ருகன் சின்ஹாவை மேற்குவங்க மாநிலத்தில் களமிறக்கி மம்தா பானர்ஜி வெற்றி பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்தக்கட்டமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பீகார் மாநிலத்தில் கட்சியை விரிவுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கும் என கருதப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட திரிணாமுல், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வலுவாக கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.
பாஜகவிலிருந்து விலகிய பாபுல் சுப்ரியோ இந்த இடைத்தேர்தலில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட சாய்ரா ஷா ஹலிமைவிட கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. போச்சாஹான் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொகுதி முன்பு பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த விஐபி கட்சியிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அமர் பாஸ்வான் இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பேபி குமாரியை தோற்கடித்துள்ளார். முகேஷ் சைனி தலைமையில் செயல்பட்டுவரும் விஐபி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஜெயஸ்ரீ ஜாதவ் வெற்றி பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட சத்தியஜித் கதம் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்கவைத்துள்ளது. கோலாப்பூர் வடக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்திரகாந்த் ஜாதவ் சென்றவருடம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கைராகர் சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியை முன்னணியில் உள்ளதால், இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவுகளில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றிகிடையாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் யசோதா வர்மா இந்த தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிடும் கோமல் ஜாகெலை விட 1200 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார் என அங்கிருந்து வந்துள்ள ஆரம்பகட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– கணபதி சுப்பிரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM