டெல்லி: கடந்த ஐந்து வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2,850 கோடி டாலர் குறைந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ச்சியாக 5-வது வாரமாக சரிந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 247 கோடி டாலர் குறைந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கான அதிக இறக்குமதி பில்களுக்கு மத்தியில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க, டாலரை விற்பனை செய்வதாகத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளி விவரப்படி, ஏப்ரல் 8ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 247 கோடி டாலர் குறைந்து, 60 ஆயிரத்து 400 கோடியே 40 லட்சம் டாலராக உள்ளது. கடந்த ஐந்து வாரங்களில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2,850 கோடி டாலர் குறைந்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 3, 2021 அன்று எப்போதும் இல்லாத அளவுக்கு 64 ஆயிரத்து 245 கோடியே 30 லட்சம் டாலரை தொட்ட பிறகு கடுமையாகக் குறைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு, அந்நிய செலாவணி சொத்துக்களின் கூர்மையான வீழ்ச்சியே காரணமாகும். இதற்கிடையில், கடந்த வாரத்தில் தங்கம் கையிருப்பின் மதிப்பு 21.5 கோடி டாலர் குறைந்து 4,251.9 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்தியாவின் சிறப்பு திரும்பப் பெறும் உரிமைகளின் மதிப்பு 14.1 கோடி டாலர் குறைந்து 1,873.8 கோடி டாலராக இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் இருப்பு நிலை 3.4 கோடி டாலர் குறைந்து 510.1 கோடி டாலராக உள்ளது.