சென்னை:
சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தை நடத்துவதற்காக உற்சவர் சுவாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டன. பண்டிதர்களும் திருமலையில் இருந்து வரவழைக்கப்பட்டனர். மாலையில் வேத பாராயணத்தைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு, பெருமாளையும் தாயாரையும் தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண வைபவத்திற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தீவுத்திடல் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.