வெயில்ல வைச்சு அப்படியே போடலாம் குளிர் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி: இந்திய நிறுவனம் அசத்தல்

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் – வி உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இவற்றை குறிப்பிட்ட குளிர்நிலையில் பதப்படுத்தியே பயன்படுத்த முடியும். இந்நிலையில், குளிர்சாதன வசதி தேவைப்படாத, சாதாரண வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தக் கூடிய புதிய தடுப்பூசியை இந்திய நிறுவனம் தயாரித்துள்ளது. இந்திய அறிவியல் கழகத்துடன் இணைந்து ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ‘மைன்வேக்ஸ்’, கடந்த ஓராண்டாக இந்த தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. கொரோனா வைரசின் செல்லில் உள்ள  ஸ்பைக் புரதமே, மனித செல்களில் வைரஸ் தொற்றிக்கொள்ள வழிவகை செய்கிறது. இந்த தடுப்பூசி  அந்த ஸ்பைக் புரதத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு  விட்டது. அடுத்த கட்டமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட  இருக்கிறது. இந்த தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 வாரங்கள் வரை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இத்தகைய ‘வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட’ தடுப்பூசிகளை, குளிரூட்டும் சாதனங்கள் இல்லாமல் தொலைதூரப் பகுதிகளுக்கும் சாதாரணமாக எடுத்து செல்ல முடியும். குளிரூட்டும் கருவிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளுக்கும் ‘மைன்வேக்ஸ்’ நிறுவனத்தின் தடுப்பூசி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.நாடு முழுவதும் நாலே பலி* இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக 975 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,40,947 ஆக உயர்ந்துள்ளது. * அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர், தொற்றுக்கு புதிதாக பலியாகி உள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5,21,747 ஆக அதிகரித்துள்ளது. * நாடு முழுவதும் 11 ஆயிரத்து 366 பேர்  சிகிச்சையில் உள்ளனர். * இதுவரை 186.38 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.