கே.வி., பள்ளிகளில் எம்.பி.,களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கை நிறுத்தம்| Dinamalar

சென்னை : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், எம்.பி.,க்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கே.வி., பள்ளி முதல்வர்களுக்கு கே.வி., சங்கதன் கடிதம் அனுப்பியுள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்,நாடு முழுதும் 1,248 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 15 லட்சம் மாணவ – மாணவியர் படிக்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன.பெற்றோர் கவலைகே.வி., பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒன்றாம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் துவங்கி, நேற்றுடன் முடிந்தது.ஒவ்வொரு ஆண்டும், கே.வி., பள்ளி மாணவர் சேர்க்கையில், ஒவ்வொரு மாநில எம்.பி.,க்களுக்கும், தலா 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அவர்களின் பரிந்துரை கடிதங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்படும். லோக்சபா, ராஜ்யசபா மற்றும் நியமன எம்.பி.,க்களும் இதற்கு பரிந்துரைக்கலாம்.

இந்நிலையில், அனைத்து கே.வி., பள்ளி முதல்வர்களுக்கும், கே.வி., சங்கதன் தலைமை அலுவலகத்தில் இருந்து, நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட அவசர கடிதம்:எம்.பி.,க்களின் பரிந்துரை கடிதத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு வழங்கப்படாது. இதை சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும், எம்.பி.,க்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனால், எம்.பி., கடிதம் பெற்று மாணவர் சேர்க்கைக்கு காத்திருந்த பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

அதிரடியாக ரத்து

பொதுவாக கே.வி., பள்ளிகளின் எம்.பி.,க்களின் சிறப்பு ஒதுக்கீட்டில் இடைத்தரகர்கள் புகுந்து, பெற்றோரிடம் பல லட்ச ரூபாய் கையூட்டு பெற்று, எம்.பி.,க்களின் பரிந்துரை கடிதத்தை தவறாக பயன்படுத்துவதாக, கடந்த பல ஆண்டுகளாக புகார்கள் எழுகின்றன.இந்நிலையில் தான், எம்.பி.,க்களின் சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுதும், 12 ஆயிரத்து 480 மாணவர்களுக்கும், தமிழகத்தில், 300 மாணவர்களுக்கும், கே.வி., பள்ளிகளின் பொதுவான விதிப்படி, சிறப்பு பரிந்துரைகள் இன்றி, கூடுதல் சேர்க்கை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.